மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் இன்று(13.10.2025) திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் கடிதத்திற்கு அமைய குறித்த நியமனத்தை ஏற்றுக் கொண்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்விப் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து குறித்த வலயத்திற்கான வலயக் கல்வி பணிப்பாளருக்கான வெற்றிடம் நிலவிய நிலையில் குறித்த பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டு, நேர்முக தேர்வும் இடம்பெற்றுள்ளது. குறித்த நேர்முக தேர்வின் அடிப்படையில் மாகாண கல்வி செயலாளரினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடமையை பொறுப்பேற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த சிவசங்கரி கங்கேஸ்வரன், மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தை சேர்ந்த இவர், ஆரம்ப கல்வியை மண்டூர் மகா வித்தியாலயத்திலும் , இடை நிலை கல்வியை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும், உயர்கல்வியை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றுள்ளார்.
மண்டூர் 13 விக்னேஷ்வரா வித்தியாலயம், மண்டூர் மகா வித்தியாலயம் போன்றவற்றில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் 2007இல் கல்வி நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து பொது ஆளணியில் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய நிலையில் இப்பதவி உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
பக்திபாமாலை பாடுபவரும், சிறந்த விசக்கடி வைத்தியரும் ஆசிரியரும், அதிபரும், தென்மோடிக்கூத்துக்கான மத்தளம் வாசிப்பவரும் பல்வேறு பக்திபாமலை கவிதைகள் அடங்கிய தொகுதிகளை வெளியிட்டவரும் மண்டூர் கவிஞர் என அழைக்கப்படுவருமான சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் புதல்வி, இவர் என்பது குறிப்பிடத்தக்கது.