மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின்
ஆசிரியர் தின விழா 2025.10.09 வியாழன் மாலை பிரதான மண்டபத்தில்
விமர்சையாக இடம் பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து பிரதான மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து தலைமையுரையை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு
தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ச .ஜெயராஜா
கௌரவ விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினர்களாக .மட்டக்களப்பு
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா .அருள் மொழி மற்றும் இணைப்பாளர் -விசேட
கல்வி, வலயக்கல்வி அலுவலகம் மட்டக்களப்பு சி .சிவகுமார் ஆகியோரும்
பங்கேற்றிருந்தனர்.
2025 சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான தொனிப்பொருளை பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகும் .
“ஒருங்கிணைந்த வாண்மைத்தொழிலாக ஆசிரியத்துவத்தை மறுவடிவமைப்போம்”
•🟠ஒருங்கிணைவுள்ள பணியாக ஆசிரியத்துவத்தை மீளமைப்போம்.
•🟡கூட்டிணைவுள்ள தொழிற்றுறையாக ஆசிரியப் பணியை மீளமைப்போம்.
🟣 கூட்டிணைந்த வாண்மைத் தொழிலாக ஆசிரியத்துவத்தை மீளமைப்போம்.
என்பதே இவ்வருட உலக ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருள் ஆகும்.
மாணவர்களுக்கு
அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல்,
அவர்களின் பொறுப்புகளை உணரச்செய்தல் சமூகத்தின் தலையாய கடமையாகும் .
அந்த
வகையில் நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை சமூகத்தால்
முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினவிழா சிறப்பாக பலரும் பாராட்டும் வகையில்
அமைந்திருந்தது .
பாடசாலை சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நாடகம் என பலவும் அரங்கேற்றப்பட்டன.
ஆசிரியர்களின் பாடல்களும் ,மாணவியர்களின் இனிமையான பாடல்கள் பார்வையாளர்களை ஈர்த்தன .
நிகழ்வின் போது பங்கேற்றிருந்த அதிதிகளுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அதோடு
கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் , மாணவர்கள் அனைவரும்
அதிதிகளால் பாராட்டப்பட்டதோடு அவர்களுக்கும் நினைவுப்பரிசில்கள்
வழங்கப்பட்டன .
ஆசிரியர் தின விழாவுக்கு பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , சமூக ஆர்வலர்கள் பிரதேசவாழ் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .
செய்தி ஆசிரியர்



























































