(கிழக்கு மக்கள் சார்பில் அம்பாறையில் இருந்து ஐ.நா வில் வலியுறுத்தினார் - சிவில் செயற்பாட்டாளர் தா.பிரதீவன்)
தமிழர்களுக்கான உரிமை, அநீதிகளுக்கான நீதி போன்ற முக்கிய விடயங்களோடு,
இன அழிப்பிற்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான நீதியும் சர்வதேச நீதிப் பொறிமுறையினூடாகவே நிலைநாட்ட முடியும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் தாமோதரம்பிள்ளை பிரதீவன் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் கிழக்கு மாகாண தமிழர்களின் சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் இன்றுவரை தொடரும் பிரச்சனைகளில் உகந்தை புத்தர் சிலை விவகாரம், வட்டமடு மேய்ச்சல்தரை, தொட்டாச்சுருங்கி வட்டை காணி தொடர்பிலும்,
மயிலத்தமடு,மாதவணை மேய்ச்சல்தரை விவகாரம், குசலானமலை, புளுட்டுமானோடை, கண்ணியா, தென்னமரவாடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு கடந்த மாதம் நீக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் நீக்கப்படாமலும் அது பிரயோகிக்கப்படுவது தொடர்பிலும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் பொலீசார் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்படுகின்ற செயற்பாடுகள் போன்ற விடயங்களையும் குறிப்பிட்டதோடு, தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இயற்கை நீரேந்து பகுதிகள் அழிக்கப்படுதல், தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்றவற்றின் பின்னால் உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருப்பது தொடர்பிலும், தொல்லியல் மற்றும் வனவிலாகாவினால் அபகரிக்கப்படுகின்ற காணிகள் போன்ற விடயங்களோடு, இன்னும் இந்த நாட்டில் அரச நிர்வாக பயங்கரவாதமும், அரச சேவை நிருவாகங்களில் அரசியல் தலையீடுகளும் இருப்பது தொடர்கிறமை பற்றியும் அவர் பதிவிட்டார்.
அதற்கு உதாரணமாக நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக அதிகார உரிமை மறுப்பு, அதன் மீதான தேவையற்ற அரசியல் அழுத்தங்கள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு தனது வருத்தத்தை தெரிவித்து பரிதாபப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என்று பேசியிருந்தார் அது நல்லது, ஆனால் தன் சொந்த நாட்டில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டது, அவர்களுக்கு தொடர்ந்தும் இழைக்கப்படும் அநீதிகள் பற்றி வருத்தம் தெரிவிக்கவோ அல்லது அவர்களுக்கான நீதி விடயங்கள் பற்றியோ கருத்து வெளியிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதோடு, தொடர்ந்தும் நாங்கள் எமக்கான நீதி விடயத்திலே உள்ளக பொறிமுறைகள் எதையும் ஏற்க மறுக்கிறோம் என்பதையும் சர்வதேச நீதி பொறிமுறைகளை மாத்திரமே நம்பி இருக்கிறோம் எனவும் அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார்.
மேலும், ஐ.நா போன்ற உயரிய சபைகள் இங்கு நான் பேசிய விடயங்களை கருத்தில் கொண்டு முடியுமான சர்வதேச நீதி பொறிமுறைகளுக்கு ஊடான தீர்வுகளை பெற்று தர வேண்டும் எனவும் தனது உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்