ஒழுங்கமைக்கப்பட்டகுற்றக்குழு உறுப்பினரானகணேமுல்ல சஞ்சீவஎன்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, விசேட அதிரடிப்படையின் (STF) இரு அதிகாரிகள் நேபாளம் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் தற்போது நேபாளத்தில் தங்கியுள்ளனர்.அவர்களுக்குத் துணையாகவும், சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யவும் இந்த அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் மூலம், காத்மண்டு நகரில் இருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்ணொருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், "கெஹெல்பத்தர பத்மே" என்ற குற்றக்குழு உறுப்பினருக்கு நெருக்கமான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி வேடத்தில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்ல இஷாரா செவ்வந்தி உதவியதாகக் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி உடனடியாகக் கைது செய்யப்பட்டாலும், இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்தார்.
அவர் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நிலையில், இந்தியா ஊடாக நேபாளம் சென்றது பாதுகாப்புப் பிரிவினரால் கண்டறியப்பட்டது.
நேற்று (14) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் இன்று மாலை (15) விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.