மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை மீள வழங்க வேண்டும்- நாமல் ராஜபக்ச

 தந்தைக்கு பாதுகாப்பு வேண்டும்: அரசாங்கத்திடம் மண்டியிடும் நாமல்! | Government Should Ensure Mahinda Security Namal

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ பாதுகாப்பை மீளப் பெறும் போது அரசாங்கம் எவ்வித நியதிகளும் பேசவில்லை.


எனினும், தற்போது குண்டு துளைக்காத வாகனத்தை மீளக் கோரும் போது மாத்திரம் கோரிக்கை கடிதத்தை கேட்கின்றனர்.

பாதுகாப்பு பறிக்கப்படும் போது, இதில் எவ்வித அரசியல் ரீதியான நோக்கங்களும் இல்லை என்றே அரசாங்கம் கூறியிருந்தது. எனினும், அது அப்படி தெரியவில்லை.

நாட்டு மக்கள் மட்டுமன்றி முன்னாள் அரச தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பு.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்து அவருக்கான பாதுகாப்பை மீள வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.