சிறுவர்களின் உளநலத்தை மேம்படுத்தும் நாளாகவே சிறுவர் தினம் அமைய வேண்டும் . அதற்கு சிறுவர்களுக்கான உள நல மேம்பாட்டு செயற்பாடுகளை நாம் நாளாந்தம் முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கொண்டாடப்படும் சிறுவர் தினம் அர்த்தமுள்ளதாக அமையும்.
இவ்வாறு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையதின் மட்டக்களப்பு பிராந்திய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின் தலைவியுமான F.தேவரஞ்சினி தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறுவர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. அத்தினத்தை முன்னிட்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
உலகெங்கிலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அநீதிகளைக் குறைக்கவும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும், சிறுவர்கள் மத்தியில் புரிதலையும் ஒற்றுமையையும் மேம்படுத்தவும் ஒரு தினமாக இத்தினம் காணப்படுவதுடன் இலங்கை போன்ற பல நாடுகள் இந்த தினத்தை (அக்டோபர் 1 ) உலக சிறுவர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
சிறுவர்களின் உணர்வு, எண்ணம் மற்றும் நடத்தையில் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பேணுவதற்கும் உள நலத்தைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் அதை மேம்படுத்தும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதையும் உணர்த்தும் ஒரு நாளான கொண்டாட்டமாக இந்த நாள் அமைய வேண்டும்
குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், சிறுவர்களை மன ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா என்பதை அடிக்கடி பரிசீலனை செய்பவர்களாக. இருக்க வேண்டும்.
இச்செயற்பாடானது அவர்களின் இயல்பான வாழ்க்கைத் திறனையும், மகிழ்ச்சியான மனநிலையையும் உறுதி செய்வதுடன் அவர்களை கல்விச் சூழல்.
குடும்பச் சூழல் மற்றும் சமூகச் சூழல் போன்றவற்றில் நல்ல உறவை வளர்ப்பதற்கும்
மனச்சோர்வு, பயம், பதட்டம்,அதிர்ச்சி போன்ற உணர்ச்சிப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து நல்ழிப்படுத்தவும்
சிறப்பாக அமைந்து விடும் என்றார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுதல், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை வழங்குதல், விளையாட்டு மற்றும் கலை போன்ற மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களில் ஈடுபடுத்துதல், தேவைப்பட்டால் உளவியல் ஆதரவை நாடுதல், உளவியல் கல்வியை கற்பதற்கு ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால் உளவியல் கல்வி அறிவின்மையால் தாம் கடந்த காலத்தில் பழக்கப்படுத்தப்பட்ட. எதிர்மறை எண்ணங்களுடன் தொடர்புடைய செயற்பாடுகளை சிறந்தது என எண்ணி சிறுவர்களைக் கையாளுவதுடன் தமது வன்முறை அழுத்தத்தையும் சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தண்டனை வழங்கி வருகின்றனர்.
அது மாத்திரமல்லாது சிறுவர்களை நல்வழிப்படுத்துவதாக கூறி சிறுவர்களை தவறான பாதையில் செல்வதற்கு உடந்தையாகவும் இருந்து வருகின்றனர். இவ்வாறு உடந்தையாக இருந்து செயற்படுவது அவர்ளின் அறியாமையாக இருந்த போதிலும் அதை உளவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இவர்களுக்கு இல்லை. உளவியல் கல்வியை கற்பது ஒரு கௌரவ பிரச்சினையாகவும் பார்க்கின்றனர். அத்தோடு தமது கௌரவ பிரச்சினையை திசை திருப்பி சிறுவர்கள் மீது குறைகூறும் நிலை அதிகரித்துள்ளது.இதன் விளைவாக சிறுவர்கள் இன்று மன உளைச்சலுக்கு உள்ளாகி எதிர்மறை எண்ணத்துடன் வாழ்ந்து வருவதுடன் தவறான முடிவுகளையும் எடுத்து வருவதை காண முடிந்துள்ளது.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக கொண்டு வரப்படும் சுற்று நிருபங்களுக்கு ஏற்றால் போல் மாணவர்களை கையாளத் தெரியாமல் மாணவர்களில் குறைகூறும் பாடசாலை ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் அதற்கு உளவியல் கல்வியை பாடசாலை சமூகம் பெற்றிருப்பது அவசியமாகும். இவ்வாருக்க உளவியல் அறிவு தமக்கு இன்றி உளவியல் ரீதியாக சிறுவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு மாணவர்களின் மனதில் ஏற்படுத்தப்பட வேண்டிய சின்னச் சின்ன மனமாற்ற செயற்பாட்டு திறனை வளர்ப்பதற்கு நாம் திறன்வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து சிறுவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை கொண்டுவருவதற்கு அனைத்து விடயங்களுக்கும் சுற்று நிருபத்தை தமக்கேற்றால் போல் எதிர்பார்ப்பது சிறுவர்ளை காலையில் நித்திரையில் இருந்து எழுந்தது இரவு நித்திரைக்கு செல்லும் வரையும் அவர்களுக்கு சுற்று நிருபம் ஒன்று கொண்டு வந்து அவர்களை உயிர் அற்ற ஜடப்பொருளாக மாற்ற முற்படும் செயலுக்கு ஒப்பாகும்.
இவ்வாறு எதிர்பார்ப்பது உண்மையில் எமது அறியாமையும் வாழ்க்கைத் திறன் இன்மையையும் காட்டுகிறது என கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உதாரணமாக சிறுவர்கள் எவ்வாறு தலை முடி வெட்டுவது, முடியை எவ்வாறு பராமரிப்பது, எப்படி நகம் வெட்டுவது எப்படி உடை அணிவது போன்ற ஒவ்வொன்றுக்கும் சுற்று நிருபம் வேண்டும் என்று கேட்போமாக இருந்தால் நாம் பெரிதும் தவறிழைத்தவர்ளாக ஆகிவிடுவோம். அது மாத்திரமல்லாது அவர்களை கையாழத் தெரியாவிட்டால் தமது கடமை என்ன என்பதை ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் தம்மை கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டும்.
சிறுவர்களும் மனிதர்களே அவர்கள் இயந்திரம் அல்ல. வன்முறையான கட்டுப்பாட்டுன் சிறுவர்களை அணுகினால் உங்களை விட பெரிய வன்முறையாளர்களாக அவர்கள் காணப்படுவார்கள் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோரிலும் பெற்றோர்கள் ஆசிரியர்களிலும் குறை கூறுவதை காண முடிந்துள்ளது. ஆனால் இரு சமூகமும் நல்லுறவுடன் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொண்டு சிறுவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
இன்று உளவியல் அறிவு இன்மையால் சிறுவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதுடன் தவறான முடிவு எடுப்பதற்கும் வன்முறையானவர்களாக மாறுவதற்கும் யார் காரணம் என்பதை சிறுவர் விடயத்தில் அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் தேங்கிக் கிடக்கின்றன என்பதை இன்றைய நாளில் கூறிக்கொள்வதுடன் சிறுவர் தினத்தை கொண்டாடுவது சிறுவர் மத்தியில் தொட்டிலும் ஆட்டி அவர்களை கிள்ளியும் விடும் கதைக்கு ஒப்பானதாகும். என்பதை யாரும் மறுப்பபதற்கு இல்லை.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் உரிமை பற்றி பேசும் பொறுப்பு வாய்ந்தவர்கள் நீக்கள் அவர்களுக்கு கல்வியை சரியாக கற்கும் உரிமையையாவது சரியாக நடை முறைப்படுத்துங்கள். உளவியல் சிந்தனையின்மை காரணமாக அநீதி இழைக்கப்பட்டு தேங்கிக் கிடக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களை பாடசாலைகளில் பழிவாங்கும் செயற்பாடு குறித்து முதல் கட்டமாக பிரச்சினையை கிழக்கு மாகாண கௌரவ ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து கௌரவ ஆளுனர் அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கொண்டு சென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் பல மக்கள் நலன்சார் கூட்டங்களில் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியை மாத்திரம் வைத்துக் கொண்டு அபிவிருத்தி தொடர்பான நிதிப் பிரச்சினைகள் மாத்திரம் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எல்லாம் மேலோட்டமாக பேசப்பட்டு உண்மை நிலை மறைக்கப்படுகின்றன.இதற்கான பிரதான காரணம் என்ன?
இதனால் கௌரவ ஆளுனரின் கவனத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் பிரச்சினைகளை நேரடியாக கொண்டு செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது. அன்மையில் நான் கௌரவ ஆளுனரிடம் முன்வைத்த பிரச்சினையை வைத்தே மட்டக்களப்பின் நிலை குறித்து கௌரவ ஆளுனர் அறிந்திருப்பார் என நினைக்கின்றேன். இன்னும் பல பிரச்சினைகளை முன்வைக்கவுள்ளேன்.
கௌரவ ஆளுனர் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுத்தாலும் கௌரவ ஆளுனரை மதித்து பிரச்சினையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் செயற்பட. விருப்பம் இன்றி உள்ளனர். இது கௌரவ ஆளுணரை அவமதிக்கும் செயலாகும். ஆளுனருக்கே இவ்வாறு என்றால் ஏழைகளின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இந்நிலை தொடருமாக இருந்தால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கும் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுவதுடன் நீதி மன்றத்தின் உதவியையும் நாடுவதாகவும் எண்ணியுள்ளேன்.
எமது சமூகப் பணியில் திட்டமிட்ட பழிவாங்கல்களும் குற்றச்சாட்டுக்களும் புறக்கணிப்புக்களும் ஒன்றும் புதிதல்ல.
எனவே சவால்கள் மத்தியில் மக்கள் நலன்சார்ந்த எமது பணி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.