பல்வேறுபட்ட சூழலில் இருந்து பாடசாலை வரும் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களை மகிழ்விப்பதன் மூலமே கல்வியை மகிழ்ச்சியான கற்கும் செயற்பாட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
இல்லையேல் தமது கவலை உணர்வுகளை வெளிக்காட்ட. முடியாத நிலையில் பாடங்களை கற்க முடியாத நிலை காணப்படுவதுடன் ஆளுமையற்றவர்களாகவும் உருவாகும் நிலையும் தோன்றி விடும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட. விரிவுரையாளரும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்ரும், உளசமூக வலுவூட்டல் வளவாளருமான திரு.S. பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஒக்டோபர் 10, சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு. இ. தியாகரெட்ணம் தலைமையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட. மனநல விழிப்புணர் செயற்பாடானது பிரதி அதிபர் திரு. ந.நவேந்திரகுமார் மற்றும் உளவளத்துணைக்கு பொறுப்பான ஆசிரியைகள் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்களை ஆக்கபூர்வமான விளையாட்டுக்கள் மற்றும் நடிப்புச் செயற்பாடுகளுக்கு உட்படுத்தி அவர்களை மகிழ்விப்பதன் மூலம் அவர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டு எதிர்மறை சிந்தனையில் இருந்து விடுபட்டு நேர்மறை சிந்தனையுடைய மனப்பான்மையை அவர்கள் வளர்த்துக் கொள்பவர்களாக மாறி விடுவார்கள்.
அதற்கு நாம் உளவியல் ரீதியான அணுகுமுறை கொண்ட பயிற்சிகளை அவர்களுக்கு அடிக்கடி வழங்க வேண்டும்.அப்போதுதான் அவர்களின் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட்டு தமது உள ஆளுமையை முன்வந்து செயற்படுத்தக் கூடியவர்களாக காணப்படுவார்கள் என்றார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் ,
மாணவர்களின் மனதில் எழுகின்ற எதிர்மறை எண்ணங்கள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுகின்ற அசாதாரண நடத்தை செயற்பாடுகளை துல்லியமாக கண்டறிந்து அவர்களை உளவியல் ரீதியாக அணுகி நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் மிகவும் முக்கியமான கடமையாகும்.
மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை எதிர்காலத்தில் கற்றறிந்த பொறுப்புள்ள மனிதனாக உருவாக்கிவிட வேண்டும்.
அதற்கு அனைவரும் கூட்டாக சேர்ந்து மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துவது எல்லோரினதும் பொறுப்பும் கடமையுமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலையின் பிரதி அதிபர் திரு. ந. நவேந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகளை சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு மனநலம் நிறைந்த உளசுகாதார வாழ்க்கை முறை இன்றியமையாத ஒன்றாக இன்று பாடசாலைகளில் காணப்படுகின்றன.
அந்த வகையில் எமது பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் ரீதியான தலைமைத்துவப் பயிற்சிகளை வாய்ப்புக்கள் கிடைக்கும்போதும் மற்றும் ஆசிரியர்களின் உளவலுவூட்டல் செயற்பாட்டின் மூலமும் வழங்கி வருகின்றோம்
.அந்த வகையில் எதிர்காலத்தில் உள ஆளுமையுடனான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு, கொழும்பு MIU பல்லைக்கழகம் மூலம் இன்று எமது பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட தியானப் பயிற்சி மற்றும் நடிப்புடன்கூடிய விளையாட்டுக்கள்,விளையாட்டில் பெற்ற அனுபவத்துடன் இணைந்த கருத்துக்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது.
பயிற்சிகள் சிறப்பாக இடம்பெறும்போது மாணவர்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற வேண்டும். அந்த வகையில் இன்று MIU பல்கலைக்கழக உளவியல்துறை மாணவி தனுஜா மூலம் இடம்பெற்ற. நடிப்புடன் கூடிய விளையாட்டு மற்றும் கருத்துக்கள் அனைத்தும் எமது மாணவர்களில் மாற்றத்தை அவதானிக்க முடிந்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இது போன்ற பயிற்சிகளை எதிர்காலத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்தும் முன்னெடுக்க இருப்பதாகவும், அதிபர்.திரு இ. தியாகரெட்ணம் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்பயிற்சி அமர்வில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்து அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பில் MIU பல்கலைக்கழகத்தின் வளவாளர் மற்றும் துணை வளவாளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிலித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் MIU பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை துணை வளவாளர் பயிற்சி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.