ஜக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமை உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் நினைவாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ‘‘உலகை வழி நடாத்த அன்பால் போஷியுங்கள்’’ எனும் தொனிப்பொருளில் 2025.10.03ம் திகதி பிரதேச செயலக டேபா மண்டபத்தில் சிறுவர் தின விழா நடைபெற்றது.
பிரதேச சிறுவர்களை பிரதம அதிதிகளாக கொண்ட இந் நிகழ்விற்கு எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் தலைமை தாங்கினார்.
சின்னஞ் சிறார்களின் இனிய வரவேற்பில், மாலை அணிவிக்கப்பட்டு சிறுகரம் தாங்கி பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர்கள் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.
மங்கல விளக்கேற்றல், மௌன இறைவணக்கம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பின்னர் நிகழ்வின் கதாநாயகர்களால் நடனம், வில்லுப்பாட்டு, பாடல், பேச்சு, நாட்டிய நாடகம், Fancy dress, தாளலயம் போன்ற நிகழ்வுகள் மூலம் தனித்துவமான ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டது.
குழந்தைகளின் சிரிப்பு, குரல், திறமை ஆகியவை நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் கவர்ந்தது. அவர்களின் திறமை மட்டுமன்றி, தன்னம்பிக்கையும் ஒத்துழைப்பும் நிகழ்வை சிறப்புறச் செய்தன.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள், ‘‘குழந்தைகளே நம் சமூகத்தின் நம்பிக்கையும் எதிர்காலத்தின் ஒளியுமாக உள்ளீர்கள்;, உங்களின் கனவுகளை நனவாக்கி, திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டியது எங்கள் அனைவரின் கடமையாகும்’’ என கூறி அனைவரையும் ஊக்கமூட்டினார்.
நவீன தொழில்நுட்பத்தின் திறனை சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட விவரண கதை காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளின் சிந்தனையை ஊக்குவிக்கும் ஒரு புதிய அனுபவமாக இது அமைந்தது.
இறுதி நிகழ்வுகளாக தெரிவு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி சேமிப்பு புத்தகம் என்பன சமுர்த்தி கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது பின்னர் கலந்து கொண்ட அனைத்து சிறார்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.
சிறுவர்களின் நெறிமுறை, நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் விதமாக அமைந்த இந் நிகழ்வு அலுவலகத்தினை மனித நேயம், பாசம், மற்றும் உற்சாகத்தினால் நிரப்பி சமூகத்துடனான உறவை வலுப்படுத்தியது.
.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)
.jpeg)





