இலங்கையில் குற்றச்செயல்களில்
ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும்
பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில்
நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இஷாரா
செவ்வந்தி வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த ஆட்கடத்தல்காரர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு
இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, தம்மை
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்துச்
சென்றவர்கள் தொடர்பான தகவல்களை அவர் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் இஷாராவை மூன்று நாட்கள்
யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து, இந்தியாவிற்கு அனுப்பிவைத்தமை தொடர்பில் 04
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், நாட்டில் குற்றச் செயல்களில்
ஈடுபட்ட பின்னர், இங்கிருந்து தப்பிச் செல்வோரை கடல் மார்க்கமாக அழைத்துச்
செல்லும் பிரதான ஆட்கடத்தல்காரரும் அடங்குவதாகக் காவல்துறையினர்
தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலரை வெளிநாடுகளுக்கு
அனுப்பிவைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் இஷாரா
செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கம்பஹா பபா
என்றழைக்கப்படும் தினேஷ் றிஷாந்த குமாரவின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான
பதிவுகளை ஆராய்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவான் இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவரான கெஹெல்பத்தர
பத்மேவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, நாட்டில் நடத்தப்பட்ட கொலைகளுக்குப்
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச
ரீதியில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை சந்தேகநபர்கள் முன்னெடுத்துச்
சென்றுள்ளமை இதுவரையான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.