ஆட்டங்காணும் பாதாள உலகு-செவ்வந்தி தப்பிச் செல்லல் முதல் கைதாகுதல் வரை.

 




பொலிஸாருக்கான கௌரவமும் மதிப்பும் நடப்பு மக்கள் ஆட்சியில்தான் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் துறையை தூர்வாரி சுத்தப்படுத்தியதாலும், அதற்குள் இருக்கும் வைரங்களைக் கண்டெடுத்து பட்டை தீட்டுவதாலும் மக்கள் மத்தியில் பொலிஸார் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தனது காக்கிச் சட்டைக்கும் தாய்நாட்டுக்கும் உண்மையாகவிருக்கின்ற பாதுகாவலர்களால் மாத்திரமே விரைவில் குற்றமற்ற தேசத்தை உருவாக்க முடியும். ஆனால், கடந்த பிரபுத்துவ ஆட்சியில் இதயசுத்தியுடன் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள், பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். மாறாக, குற்றக் கும்பல்களுக்கு உதவி புரியும் வலையமைப்பு பொலிஸ்துறைக்குள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதாவது, பெரும் குற்றவாளிகளுக்கு அரச அனுசரணை கிடைத்து வந்தது. அதனால் நாடு குற்ற தேசமாக மாறிக்கொண்டிருந்தது. ஒருவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்காவிடில், எதிர்கால இலங்கையின் நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு கொடூரமாக மாறியிருக்கும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தொடக்கத்தில் இலங்கையில் பாதாளக் கும்பல் குழுச்சண்டைகள் இடம்பெற்றன. நாட்டில் ஆங்காங்கே நேரகாலமின்றி துப்பாக்கிகள் வெடித்தன. புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது நீதிமன்ற அறையில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ எனும் பாதாளக் கும்பல் பிரதிநிதியை சுட்டுக்கொன்றுவிட்டு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் செல்லுமளவிற்கு நிலைமை மோசமாகவிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புத்திரன் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதாகவும், தனக்கு அதிகாரத்தை வழங்கினால் இவற்றுக்கு முடிவுகட்டுவதாகவும் கூறினார். இயலுமையற்ற அரசாங்கம் என்று திசைகாட்டியை விமர்சித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட பின்னர், துப்பாக்கிதாரியான மஹரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கொலையாளிக்கு சட்டப் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து கொடுத்து கொலைக்கு உடந்தையகாவிருந்த ஜாஎலவை வதிவிடமாகக் கொண்ட இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி முகமது அஸ்மான் செரிஃப்டீன் என்ற போலி அடையாளத்துடன் தன்னை முன்னிறுத்தினார். ஈஸ்டர் தாக்குதல் சஹரானை தொடர்ந்து மீண்டும் முஸ்லிம் பெயரொன்று வெளிவந்ததால், நாட்டில் பதற்றநிலை தோன்றியது. சிங்கள பேரினவாதிகள் தலைதூக்க முயற்சித்தபோது, முஸ்லிம் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாமல் ராஜபக்ஷ இதன்போதுதான், வீராவேசத்தை காட்ட முன்வந்தார்.

ஆனால், புதிய அரசாங்கத்தின் தலையீட்டில் குற்றவாளி பற்றிய முழுமையான தகவலை திரட்டியபோது, துப்பாக்கிதாரி முகமது அஸ்மான் செரிஃப்டீன் அல்லவென்பது வெளிச்சத்துக்கு வந்தது. சிங்கள பேரினவாதிகள் ஏமாற்றமடைந்தனர். முஸ்லிம் விரோதப்போக்கு உச்சம் கண்டிருந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலமாக இருந்திருந்தால், நிலைமை படுமோசமாக மாற்றப்பட்டிருக்கும். ஆனால், நாட்டின் ஆட்சி மாற்றத்தோடு, பெரும்பாலான மக்கள் சிந்தனை ரீதியாகவும் முன்னேற்றம் கண்டிருந்தனர். அதனால், பொறுமையுடன் பாதுகாப்புத் துறையின் நகர்வுகளை அவதானித்தனர். அதன்படியே, உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்தே நாட்டில் துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்தன. அதன்மூலம் திசைகாட்டி அரசாங்கத்தை பயமுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை.

இருப்பினும், இஷாரா செவ்வந்தியின் தலைமறைவு பெரும் சவாலாக மாறியது. பாராளுமன்றத்திலும் ஊடகச் சந்திப்புகளிலும் எதிர்க்கட்சியினர், “செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாத பலவீனமான அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்” என்று கேலி செய்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நாமல் ராஜபக்‌ஷ, உதய கம்மன்பில மற்றும் சாமர சம்பத் போன்றோர் இந்த வரிசையில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையை லாயக்கற்றது என்றனர். ஆனால், நிலைமை தலைகீழாக மாறிப்போனது. இஷாரா செவ்வந்தி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, மறுநாள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், செவ்வந்தி தலைமறைவாகிய நாள் முதல் இன்றுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் அரசியலே பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திசைக்காட்டி அரசாங்கத்தை தொடக்கத்தில் “எல்போர்ட்” அரசாங்கம் என்று சொன்னவர்கள், தற்போது அரசாங்கத்தின் வேகத்திற்கும், விவேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாது பலவீனமடைந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக, துள்ளிக்கொண்டிருந்த நாமல் ராஜபக்ஷ கூட ஆட்டம்கண்டு போயிருக்கிறார்.

செவ்வந்தி தலைமறைவாகியபோது, பாதாள கும்பல்களின் அட்டகாசம் தலைவிரித்தாடிய போதிலும், படிப்படியாக அதற்கு முடிவுகட்டப்பட்டது. குற்றக்கும்பலுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வரை கைது செய்யப்பட்டனர். உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதுபோல, திறமையான அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலராக ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டார். அதுபோல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டார். தற்போது, போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சீ.பீ. நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகலவிற்கு உரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி, ஊழல் மோசடி, நிதி மோசடி, அரசியல் படுகொலைகள் போன்ற விடயங்களின் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதுடன், பிரபலமான பழைய அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர். பலர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பத்தில், நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டது. இதன்போது, ஐஸ், ஹெரோயின், கொக்கேன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் ஏனைய தேடல் வழிகளையும் திறந்துவிட்டன.

தொடக்கத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களிலும் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் சோதனைச் சாவடிகள் போடப்பட்டு, வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேஷியாவில் கெஹெல் பத்தர பத்மே, பெக்கோ சமன் உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை இந்தோனேசியாவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட தோல்விகண்ட அரசியல்வாதிகளின் கவனம் ரணில் விக்கிரமசிங்கவின் மீதே இருந்தது.

ஆனால், குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் பெரும் அரசியல் தலைகள் குழம்ப ஆரம்பித்தன. தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையில், கெஹெல் பத்தர பத்மேவுக்கு சொந்தமான நுவரெலியாவில் உள்ள ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை பற்றிய விடயமும் வெளிக்கொணரப்பட்டது. அத்துடன், மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட மொட்டுக் கட்சியின் உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் பியல் மனம்பேரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பத் மனம்பேரி கெஹெல் பத்தர பத்மே, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோருடன் வட்சப் இல் தொடர்புகளை பேணிவந்த விடயம் விசாரணைகளில் வெளிவந்தது. சம்பத் மனம்பேரியின் மைத்துனர் பெக்கோ சமனின் எல்லா நிதி விவகாரங்களையும் நிர்வகித்துள்ளமையும் விசாரணைகளில் வெளிவந்தது. அத்துடன், சந்தேக நபரிடமிருந்து விற்பனைக்காக தயாராக இருந்த 555 கிராம் ஹெரோயின், கைத்துப்பாக்கி மற்றும் மெகசின் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

மொட்டுக் கட்சி போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபட்டதையடுத்து, நாமல் ராஜபக்ஷ ஊடக அறிக்கைகளை வெளிவிட ஆரம்பித்தார். அரசாங்கம் தன்னை குற்றவாளியாக்க முயல்வதாக தெரிவித்தார். ஆனால், நாமல் ராஜபக்ஷவைப் பற்றி அரசாங்கம் எவ்விடயத்தையும் முன்வைத்திருக்கவில்லை.

தங்காலை – சீனிமோதரை பகுதியில் 700 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கையில் ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய நிறைகொண்ட போதைப்பொருளாக இதுவாக பதிவாகியது. இது “உனாகுருவே சாந்த” எனும் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இக்கடத்தலில் ஈடுபட்ட “பெலியத்தே சனா” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், இக்கடத்தலில் முக்கிய சந்தேக நபரான “பூமிதெலா”வின் நெருங்கிய நண்பர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாமல் ராஜபக்ஷவின் அறிக்கை மேலும் சூடுபறக்க ஆரம்பித்தது. போதைப்பொருள் தீத்தொழிலுக்கும் மொட்டுக் கட்சிக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கூடுதல் விசாரணையில், மித்தெனிய கஜ்ஜாவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என்றும், பெக்கோ சமனின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆயுதத் தொகை விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கலில் சம்பத் மனம்பேரி தொடர்புபட்டுள்ளதுடன், குறித்த துப்பாக்கியை இன்னொருவருக்கு கைமாற்றிய விடயமும் விசாரணையில் வெளிவந்தது. ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு சம்பத் மனம்பேரி தனது அரசியல் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படைகளில் உள்ள தொடர்புகளையும் பயன்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், கஜ்ஜாவை கொலை செய்வதற்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் ஜீவன் என்ற சந்தேகநபர், சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான பேருந்தில் ஒரு காலத்தில் பணிபுரிந்தவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கஜ்ஜா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், ஊடகவியலாளர் சமுதித்தவுடனான பேட்டியில், தாஜூதீன் கொலை பற்றிய விடயங்களை தெரிவித்திருந்தார். அத்துடன், ராஜபக்ஷக்களின் குற்றச் செயல்கள் பற்றிய விடயங்களும் தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மைகள் வெளிவருவதற்கு முன்னரே கஜ்ஜா படுகொலை செய்யப்பட்டார். ஆனால், தாஜூதீன் கொலை செய்யப்பட்ட நாளில் அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற டிபெண்டரில் ஏறும் நபர் தனது கணவர் கஜ்ஜா தான் என்று கஜ்ஜாவின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே, இவை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதன்போதும் தானாகவே முன்வந்து குற்றவாளியை கண்டுப்பிடிக்குமாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். நாமல் ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் தாஜூதீனின் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளதுடன், ஒன்றாக ரக்பி விளையாடியவர்களும் ஆவர். ஆனால், தாஜூதீனின் மரணச் சடங்கில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஷாரா செவ்வந்தியை கண்டுப்பிடிக்க முதல் நாட்டில் நிலவுகின்ற குற்றச்செயல்கள் பற்றிய புதிய விடயங்கள் வெளிகொணரப்பட்டதுடன், விசாரணைகளில் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்தது.

செவ்வந்தி கெஹெல் பத்தர பத்மேவின் உதவியுடன் இந்தியா வழியாக நேபாளத்திற்கு தப்பிச் சென்றிருக்கிறார். அவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய் என்பவர் உதவி செய்துள்ளார். அவரும் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டவர்களின் ஒருவராவார். பேலியகொட குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகலவின் அதிரடி நடவடிக்கையில், சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதும், ஊடக அறிக்கையை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றவாளிகளுக்குப் பின்னால் இருப்பவர்களை இந்த அரசாங்கம் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிபுரிந்தவர்களை மறைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். நாடு கடந்து சென்று செவ்வந்தியை அரச தரப்பு கைது செய்தது குற்றங்களை மூடிமறைப்பதற்கு என்று நாமல் ராஜபக்ஷ தவறாக விளங்கி வைத்திருக்கிறார் போலும்.

ஆக, இறுதியாக எல்லா சம்பவங்களையும் கோர்த்துப் பார்க்கும்போது, எல்லா குற்றவாளிகளும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் உள்ளமை வெளிப்படுகிறது. அத்துடன், அரசியல் தலையீடும் இருப்பது மனம்பேரி மற்றும் கஜ்ஜா போன்றவர்களின் கூற்றில் வெளிப்பட்டுள்ளது. இருப்பினும், விசாரணைகளின் முடிவிலேயே உண்மை நிலவரம் வெளிவரும். அதுவரையில், எதிர்க்கட்சியினர் பதற்றமடையாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், திசைகாட்டி அரசாங்கம் பதற்றமடையாது நிதானமாக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த அடிவைப்புகளில் உண்மையும், நேர்மையும், அர்ப்பணிப்பும் காணப்படுவதால் எல்லாம் சரியாகவே நிறைவேறுகிறது. அத்துடன், குற்றக்கும்பல்களை ஒழித்துக் கட்டாது அரசாங்கம் ஓயப்போவதில்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும், குற்றவாளிகளை கொண்டாடுபவர்களின் மூளையை எக்கருவியை கொண்டு மதிப்பிடுவது என்பது மாத்திரமே புரியாத புதிராக இருக்கிறது.

சதீஸ் செல்வராஜ்