தேசிய வாசிப்பு மாதம்- ஒக்டோபர் 2025இனை சிறப்பிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொதுநூலகத்தினால் வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலயத்தில் “சிறுவர்களுக்கான புத்தகக் காட்சியும் நடமாடும் நூலக சேவையும்“ நடைபெற்றது.
தரம்-1 முதல் 5 வரையான 500க்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றி மகிழ்வித்தனர்.
அதிபர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் வேண்டுதலின் பேரில் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக “கோகுலம்“ சிறுவர் சஞ்சிகை மாணவர்களின் பார்வைக்கும் வாசிப்புக்கும் இங்கே வைக்கப்பட்டது.
அத்துடன், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்களுடன் புகழ்பெற்ற “யாழ்நூல்“ தனியாக காட்சிப்படுத்தப்பட்டு, அதனை பார்வையிட்ட பின்னேரே நூல்களை பார்வையிடும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர்களுக்காக விசேடமாக கலைக்களஞ்சியங்கள், தமிழ் அகராதிகள், ஆங்கில - தமிழ் அகராதி மற்றும் மும்மொழி அகராதி, இந்துக் கலைக்களஞ்சியம், திருக்குறள், பாரதியார் பாடல்கள் என உசாத்துணைப் பகுதி ஆவணங்களும் மாணவர்களுக்காய் இங்கே காட்சிப்படுத்தப்பட்டது.
பேத்தாழை பொதுநூலக சிறுவர் பகுதியில் சிறப்பு சேகரிப்பாய் “புரோடிஜி“ சிறுவர் நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் சிறுவர்களை உடன் கவர்ந்து எடுத்துப் படிக்கத் தூண்டும் வகையிலான தலைப்பிலான நூல்களைத் தெரிவு செய்து வைக்கப்பட்டன. இதில் தரம்-4,5 மாணவர்கள் இத்தொகுதியில் பல நூல்களை எடுத்து படித்ததை அவதானிக்க முடிந்தது.
அவ்வகையில், மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்வாய் இந்த “நடமாடும் நூலக சேவை” அமைந்திருந்தது.
ந.குகதர்சன்