தீபாவளி தினத்தன்று உதய கம்மன்பில நகைச்சுவையான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் .

 


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளை, அரசாங்கம் கையாளும் விதம் குறித்து பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில விமர்சனம் வெளியிட்டுள்ளார். 
 
இதன்படி, உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வழங்கப்படும் அரச நிதியை அரசியல் கட்சி நிதிக்காக சட்டபூர்வ நன்கொடையாக வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அத்துடன், ஒருவரின் வேதனத்தை செலவிடுவதற்கும், அரச நிதியை தவறாக பயன்படுத்துவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட வருமானத்தை தாங்கள் விரும்பியபடி பயன்படுத்துவதற்கு சுதந்திரம் உள்ளது. 
 
எனினும், அலுவலகங்கள், எரிபொருள், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்ற கொடுப்பனவுகளை பொது நோக்கத்திற்காக மாத்திரமே செலவிட வேண்டும் எனவும் அவர் விளக்கியுள்ளார். 
 
வாடகை, மின்சாரம் அல்லது உபகரணங்கள் போன்ற அலுவலகத்தை பராமரிப்பதற்கு வழங்கப்படும் நிதியை ஒரு கட்சியிடம் ஒப்படைக்க முடியாது. 
 
அவ்வாறு செய்வது அரச நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இதுபோன்ற செயல்கள் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் எனவும், நீதிமன்றத்தால் பிணையில் செல்வதற்கு அனுமதிக்க முடியாத குற்றமாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இதற்கமைய, 2029ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெலிக்கடை சிறையில் தனியானதொரு பிரிவை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.