முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே- நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன்

 







முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு  எஞ்சியது கல்வி மாத்திரமே.
இவ்வாறு நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரும் இந்திரன் பௌண்டேசன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான இ.ரூபசாந்தனின் சிந்தனையின் செயற்பாடாய் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல் செயலமர்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி வேப்பயடி கலைமகள் வித்தியாலயத்தில்  அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த தவிசாளர் மேலும்  பேசுகையில். 

எம் தமிழினம் முப்பது வருட கால யுத்தத்தினை சந்தித்து உடமைகள் உயிர்கள் பலவற்றை இழந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்ந்தாலும் உலக அரங்கிலோ எம் நாட்டிலோ எம்மவர்கள் இழக்காத சொத்து கல்வி மாத்திரமே ஆகவே நாம் எதை இழந்தாலும் கல்வியின் பயனால் அனைத்தையும் தேடிக்கொள்ள முடியும்.

இந்த நாவிதன்வெளி பிரதேசத்திற்கு  மாத்திரமல்ல எனைய பகுதிகளுக்கும் கல்விக்கு நான் சேவை செய்ய ஒரு போதும் தயங்கியதில்லை . கல்வி கற்ற இளம் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாம் தனி மனித ஒழுக்கம், பொருளாதாரம் என்பவற்றை வளர்த்து முன்னேற்றம் அடைந்த சமூகத்தை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

இந்த மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல் செயலமர்வினை வளவாளர் வி. தயாநிதி ஆசிரியரினால் சிறப்பாக நாடாத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் கலைமகள் வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா ஆசிரியர்கள் ,பரீட்சைக்கு தோற்றவிருக்கும் நாவிதன்வெளி கோட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)