கிழக்கு மாகாணத்தில் 6,613 ஆசிரிய வெற்றிடங்கள் .?

 


இலங்கையில் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்,


அத்தோடு தேசிய பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (21) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 

 அதனடிப்படையில், மேல் மாகாணத்தில் 4,630, வெற்றிடங்களும், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும், மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்களும், வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஊவா மாகாணத்தில் 2,780 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்களும் , சபரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்கள் மற்றும் வட மாகாணத்தில் 3,271 வெற்றிடங்களும் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

 ஆசிரியர் சேவையின் தரம் III (A) ஐச் சேர்ந்த, இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.