கோலாகலமாக நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025


 






யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட   பண்பாட்டுப் பெருவிழா(03.10.2025) வெள்ளிக்கிழமை பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித யுவானியர் தேவாலய முற்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி பி. ப. 01.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெரு விழா சிறப்பாக  நடைபெற்றது. 

மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவரும் அரசாங்க அதிபருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் திருவாட்டி இமெல்டா சுகுமாா் அவர்களும்,   சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் அவர்களும்,   வடக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் அலகின்  உதவிப்பணிப்பாளர்  திருமதி தர்சினி நிதர்சன்  அவர்களும்,  கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல்  கேதீஸ்வரன் அவர்களும்   கலந்து சிறப்பித்திருந்தார்கள். 

இந் நிகழ்வின் வரவேற்புரையானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. 

குழந்தை  ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், அரங்கத்திறப்புரை கலாநிதி தே. தேவானந் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், இவ் விழா பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அந்தவகையில் தமிழ் தாய் வாழ்த்து (நல்லூா் பிரதேச செயலகம்),  மங்கல இசை (கரவெட்டி பிரதேச செயலகம்) வரவேற்பு நடனம் (பருத்தித்துறை பிரதேச செயலகம்) செம்பு நடனம் (வேலணை  பிரதேச செயலகம்) நாதசங்கமம்  (கோப்பாய் பிரதேச செயலகம்)  கும்மி (கரவெட்டி பிரதேச செயலகம்), நாட்டார் பாடல் (நெடுந்தீவு பிரதேச செயலகம்), கரகாட்டம் (மருதங்கேணி பிரதேச செயலகம்), கிராமியப் பாடல் (உடுவில் பிரதேச செயலகம்), கோலாட்டம் (ஊர்காவற்துறை பிரதேச செயலகம்), வீரபத்திர வசந்தன் (தெல்லிப்பழை பிரதேச செயலகம்), தசாவதார நடனம் (பருத்தித்துறை பிரதேச செயலகம்),   இஸ்லாமிய நடனம்  (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்), இராவணன் கூத்து (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்) என்பன சிறப்பாக நடைபெற்றது. 

மேலும், இந் நிகழ்வில் "யாழ்ப்பாணம் - 4" (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது. நூலின் முதற்பிரதியினைஅரசாங்க அதிபர் வெளியிட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருவாட்டி இமெல்டா சுகுமாா் அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலிற்கான வெளியீட்டு ரையினை வழங்கிய   யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன் அவர்கள், இந் நூலானது எமது மானிட விழுமியங்களை உள்ளடக்கியவகையில், 27 கட்டுரைகளையும், 09 கவிதைகளையும், ஒரு சிறுகதையினையும் தாங்கியவண்ணம் உள்ளதாகவும் மேலும் விருது பெறுபவர்களின் விபரங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து, இந் நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் எனவும், எதிர்கால சந்ததிக்கு வாழ்வியலுடன் கூடிய பண்பாட்டு நூலாக  கையளிக்கும் சிறப்பை பெற்றுள்ளதாக  "யாழ்ப்பாணம் - 04"  பெருமை சேர்த்தார். 

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் திருவாட்டி இமெல்டா சுகுமாா் அவர்களும்,   சிறப்பு விருந்தினர் உரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.  . 

மேலும் இந் நிகழ்வில் "யாழ் முத்து" விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதுடன்,  அரங்கத்தினை வடிவமைத்த மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செல்வரத்தினம் சபேசன் அவர்களும், நூலுக்கான அட்டைப்படத்தினை வடிவமைத்த ஆழியவளையினைச் சேர்ந்த திரு. தவராசா பகிரதன் அவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணலினி  விஜயரத்தினம் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது. 

இந் நிகழ்வில் பெருந்திரளாக கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது மக்கள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.