திருஅருட்பிரகாச
இராமலிங்க வள்ளலார் இப் பூவுலகில் அவதரித்து 202 வருடங்கள் ஆகின்றன.
அவரருளிய திருவருட்பா இன்று வரையிலும் பேசப்படுகிறது.அவரின் அணையா விளக்கு
அணையா அடுப்பு இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
"வாடிய
பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன்" என்ற வள்ளல் பெருமான், நாம்
உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும்.
அருட்பிரகாச வள்ளலார் பூமிக்கு வருவிக்கப்பட்ட நாள். அக்டோபர் 05 ஆகும்.
இந்தியாவின்
கடலூர் மாடட்டம் மருதூரில் 1823 அக்டோபர் 05 ஞாயிற்றுக்கிழமை நாள் அன்று
இராமையா சின்னம்மை ஆகியோருக்கு இறைவனால் பூவுலகிற்கு வருவிக்கப்பட்டவரே
அருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும் இராமலிங்க அடிகளார்.
ஒரு
சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக்
குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச
சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு
சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர்
சாதிய பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
எதிலும்
பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு
கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய
கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளைக் கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக்
கொள்கையாகக் 'கொல்லாமை' கொள்கை ஆன உயிர்களிடத்தில் அருள் செய்யும்
கொள்கையைப் பரப்பியவர். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று
கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே 'திருவருட்பா' என்று
அழைக்கப்படுகிறது. இவரது சேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007-ஆம்
வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
வடலூர்
இராமலிங்கம் என அறியப்படுபவர். ஓதாதுணர்ந்த அறிஞர். சமூக
சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர்,
மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என
பன்முகங்களைக் கொண்டவர்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்.
“தமிழ்க்
கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய
வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்கரையே சாரும்”
என்கிறார் மு.வரதராசனார்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
முருகன்,இராமன்,சிவன்
என அனைத்து தெய்வங்கள் மீதும் பாக்கள் எழுதிய போதிலும் கடவுள் ஒருவரே ;
எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணுதல் வேண்டும் ;கோவில்களில் உயிர்ப் பலி
கூடாது என்ற சமய சீர்திருத்தக் கொள்கையுடையவர்.
சாதி,சமய வேற்றுமைகளையும் வழிபாட்டுச் சடங்குகளையும் மறுத்து, இறையை ஒளிவடிவாக வணங்கும் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்வைத்தவர்.
தனது
சமரச சுத்த சன்மார்க்க கொள்கைக்காக ,தனிக் கொடி, தனிச் சபை , கண்ட இவர்
‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை ‘ என தனி முழக்கம் கொண்டவர்.
வடலூரில் சத்தியஞான சபையையும் சத்திய தருமசாலையையும் நிறுவி ‘ஜீவகாருண்ய’த்தை வலியுறுத்தியவர்.
‘வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று இவர் ஏற்றிய ‘அணையா அடுப்பு’
இன்றளவும் வடலூர் தருமசாலையில் மக்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறது.
இராமலிங்க
அடிகள் மேற்கொண்ட சமயச் சீர்திருத்தங்கள் அன்றைய மரபார்ந்த சமயவாதிகளால்
ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராகப்.
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், அவரின் பாடல்களை மருட்பா என்று சொல்லி மறுக்க,
இருவருக்குமிடையே, அருட்பா மருட்பா விவாதமும் நடந்தது.
படைப்புகள்
தனது ஒன்பதாவது அகவையில் கந்தகோட்டம் முருகன் மேல் ‘தெய்வமணி மாலை’ இயற்றியவர்.
மனுமுறை
கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற 2 உரைநடை நூல்களையும் ஏறத்தாழ 6000
பாக்கள், ஆறு திருமுறைகள் கொண்ட திருவருட்பாவை இயற்றியுள்ளார்.
ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர்.
விருதுகள்
இந்திய ஒன்றிய அரசு 2007ல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
‘ஜோதி வழிபாட்டை முன்னிறுத்தியதால் ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.
நம்மிடையே
வாழ்ந்து மனிதனும் தெய்வமாகலாம் என்ற கோட்பாட்டுக்கு அமைவாக சாதி, சமய,
சடங்குகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சமூக சீர்திருத்த கோட்பாடுகளை
மக்கள் மத்தியிலே முன்வைத்து, தனக்கென சங்கம் அமைத்து தனிக்கொடி கண்ட
சன்மார்க்கி, அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ ஜீவகாருண்யம் போதித்த
வள்ளலார் என்று அழைக்கப்பட்ட திரு அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கம்
அடிகளாரின் பிறந்த தின நிகழ்வுகள். சன்மார்க்க கோட்பாடுகளை ஏற்ற உலகெலாம்
வாழும் மக்களால் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடபட உள்ளது.
அந்த
வகையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பில் அமையப்பெற்றுள்ள.
வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்ப மையத்திலும் விசேட ஆன்மீக நிகழ்வுகள்
நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
வள்ளலாரின் 202 வது அவதார தின விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு.