சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் சனிக்கிழமை(04.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக ஊடகப் பிரகடனத்தின் 2.0 பிரதிகள் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன், அவர்களது உரைகளும் நடைபெற்றன.
சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வாய்ப்புகள் மற்றும் அவற்றை சவால்களுடன் ஆராய்தல், செயற்கை நுண்ணறிவு உருவாக்கமானது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தல், புதிய தொழில்நுட்ப போக்குகளுக்கு மத்தியில் சமூக பொறுப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்குவதற்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது, இணையமும் சமூக ஊடகங்களும் சமூகத்தில் பெருகிய முறையில் சக்திவாய்ந்த தளங்களாக மாறிவிட்டன. அவை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சக்தியாகச் செயல்பட முடியும், ஆனால் சில சமயங்களில் அவை மோசடி, தவறான தகவல், வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் நீதித்துறைக்கு புறம்பான அடக்குமுறைக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு சமூக ஊடக பிரகடனம் 2.0 புதிய வழிகாட்டுதல்களை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஊடகம், நெறிமுறைகள் வெகுஜன ஊடகங்கள் பொறுப்புடன் பயன்படுத்தல் மற்றும் அரசாங்கத்தின் புதிய ஊடக கொள்கைகள் தொடர்பாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் தெளிவுபடுத்தினார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், சமூக ஊடகப் பிரகடனம் 2.0, செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் தொடர்பாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளர் சம்பத் சமரகோன் தெளிவுபடுத்தினார்.
சமூக ஊடகப் பிரகடனமானது 2019 ஆம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சமூக ஊடக பிரகடனம் 2.0 மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தலைவர் இலட்சுமணன் தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இ;ந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஊடகவியலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள்,; என பலரும் கலந்து கொண்டனர்.