பெற்றோர்களின் மன அழுத்தமானது தங்களது குழந்தைகளின் வாழ்வில் விபரீத முடிவுகளை ஏற்படுத்தி விடும் அளவிற்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனாலேயே அனேகமான குழந்தைகள் விபரீத முடிவுகளை எடுத்து தமது உயிரை மாய்த்துக் கொள்கின்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும்,உளசமூக வலுவூட்டல் வளவாளருமான திரு.S.பிரான்சிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயது சிறுமி 27.09.2025 அன்று விபரீத முடிவை எடுத்து தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 172 பேரும், 2025 ஆகஸ்ட் 31 வரையும் 105 பேருமாக. மொத்தம் 277 பேர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதுடன் இந்த விபரீத முடிவில் மாவட்டம் 2ஆம் இடத்தில் இருப்பதாவும் அறிய முடிந்துள்ளது.
இதே கல்வி வலையத்தினுள் அண்மையில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட. சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று இப்பிரிவில் வளர்ந்தோரின் விபரீத முடிவுகளும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றமை காணப்படுகின்றது.
மேலும் இவ்வாறான விபரீத முடிவுகள் ஏற்படா வண்ணம் உரிய முறையிலான செயற்திட்டங்கள் புதிதாக உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் உள்ளதை பொறுப்புவாய்ந்தவர்கள் உருவாக்க முன்வர வேண்டும்.இல்லையேல் மேலும் பல விபரீத முடிவுகளைச் சந்திக்க நேரிடும்
இடம் பெற்று வரும் விபரீத முடிவுகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல நமக்கு தோன்றினாலும் அக்காரணம் குறித்து நாம் விமர்சித்தாலும் , உண்மை அதுவல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்வதுடன் 90% மன அழுத்தத்தம் மட்டுமே விபரீத முடிவுக்கு பிரதான காரணமாக. அமைந்து விடுகின்றது என்பதையும் நாம் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு விபரீத முடிவுகளின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. இதனால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை கண்டறிந்து அதில் இருந்து மீள்வதற்கு உளவியல் கல்வி விழிப்புணர்வை வழங்க வேண்டும். அத்துடன் விபரீத முடிவுகளுக்கு மரபணு சார்ந்த செயற்பாடுகளும் உள்ளதுடன் மிகவும் ஆபத்தானது என்பதையும் தெளிவுபடுத்தி அதில் இருந்து அவர்கள் விடுபட வழிகாட்ட வேண்டும்.
இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகரித்துள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. இன்று உலகளவில் 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு விபரீத முடிவுகளே ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
பெற்றோரின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்சினைகளை சந்திக்கும்போது விபரீத முடிவு முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுவதுடன்
.அதிலும் தாய்மாரின் மன அழுத்தம் குழந்தைகளில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விடயங்களையெல்லாம் துல்லியமாக கற்றுக்கொண்டு செயற்பட்டால் மாத்திரமே விபரீத முடிவுகளில் இருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். மாறாக பொருத்தமற்ற கருத்தரங்கு பயிற்சிகளை நடர்த்துவதாலோ அல்லது விபரீத செயற்பாட்டிற்கு காரணமாக இருக்கும் செயலை விமர்சிப்பதாலோ எதுவும் நன்மை கிடைக்கப் போவதில்லை.
இளம் வயதினரின் விபரீத முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது பெற்றோரகளின் எண்ணங்களை சார்ந்து உள்ளது என்பதை பெற்றோர்களுக்கு சரியாக விழிப்பூட்டல் செய்தல் வேண்டும்.
விபரீத எண்ணங்களுக்கு மரபியல் அல்லது வேறுபட்ட காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது ஆசிரியர்களினதும் பெற்றோர்களின் கடமையாகும்.
பெரும்பாலான இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் குழந்தைகளிடம் விபரீத எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிநடத்த வேண்டும்.என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பல்வேறு காரணங்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை தொடருமாக இருந்தால் உள ஆரோக்கியமான கற்றறிந்த சமூகத்தை உருவாக்க முடியாது.
மனச்சோர்வினால் விபரீத எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும்.
மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும்.
அத்துடன் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களை விபரீத ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க சிறந்த உளவியல் வழிகாட்டல் பயிற்சி அவசியம் என அவர் மேலும் தெரிவித்தா

.jpeg)





