மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு!!

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலக கட்டிடத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டீ.கமகே அவர்களுடன் இன்று (15) திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் உயர் பீட பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆலோசனை சபையின் துறைசார் ஆலோசகர்கள், கலந்து கொண்டு நீண்ட காலமாக மாவட்டத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், தாம் எதிர்பார்க்கும் தீர்வினையும் கோரிக்கைகளாக முன்வைத்திருந்தனர்.

இன்று (15) திகதி நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது விசேடமாக விவசாயம், கால்நடை மற்றும் மேச்சல் தரை பிரச்சனை, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி, பெண்கள் மற்றும் மகளீர் அபிவிருத்தி, காணி, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை, மாவட்டத்திற்கு உகந்ததாக அமையாத அடிவிருத்தி திட்டங்கள், யானை மனித மோதல், நுண்கடன், போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவை உருவாக்குதல், நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த முந்தனையாறு திட்டத்தை நடைமுறைப்படுத்தல், கண்டியணாறு திட்டம், மகாவலி திட்டம் போன்ற மேலும் பல மாவட்டம் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், தாம் திட்டமிட்டபடி அனைத்துப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த முடிந்ததுடன்,  மட்டக்களப்புக்கு வருகை தருமாறு பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக தாம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாகவும்,  அனைத்துப் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பணிப்பாளர் நாயகம்  ஒப்புக்கொண்டுள்ளதாக குறித்த சந்திப்பின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் பிரதிநிதியொருவர்  தெரிவித்தார்.