7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்த பூமியில், மக்களை இணைக்கும் பாலமாக மொழிபெயர்ப்பு இருக்கின்றது.
உலக நாடுகளிடையேயான கலாசாரம், அறிவியல்,
அரசியல், கல்வி, வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் தொடர்புகளை
ஏற்படுத்தும் முக்கிய கருவியாக மொழிபெயர்ப்பு நோக்கப்படுகிறது.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கின்ற நிலையில், அதனை ஒருங்கிணைப்பதில் மொழிபெயர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த மிக முக்கியமான பங்கிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
அதேநேரம் மொழிபெயர்ப்பாளர்களின் பணி மற்றும் பங்களிப்பைக் கௌரவிக்கும் அங்கீகரிக்கும் நாளாகவும் இந்த நாள் திகழ்கின்றது.
உலகில் அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்ட
நூலான பைபிளை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவராகவும், மொழிபெயர்ப்பு
துறையின் முன்னோடியாகவும் அறியப்பட்ட செயிண்ட் ஜெரோம் என்பவரை நினைவுகூரும்
வகையில் இந்த நாள் உருவாக்கம் பெற்றது.
1991ஆம் ஆண்டு முதல் சர்வதேச
மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், 2017 ஆம் ஆண்டே ஐக்கிய
நாடுகள் சபை இந்த தினத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
இதற்கமைய கடந்த 8 வருடங்களாகக்
கொண்டாடப்பட்டு வரும் இந்த மொழிபெயர்ப்பு தினம் இலங்கை போன்ற பல்வேறு
மொழிகள் பேசப்படும் நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.