


மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் திறன்விருத்தியை நோக்காகக் கொண்டு திருப்பெருந்துறை திறந்த வெளிச் சிறைச்சாலையில் அமைக்கப்பட்ட நெசவு பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவானது மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் 29.08.2025 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிராமிய தொழிற்துறை திணைக்களம் மற்றும் மதகு நிறுவனம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டு மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நெசவு பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையத்தில் சிறைக்கைதிகளுக்கான பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மட்டக்களப்பு மாவட்ட கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் றிஷானா சாரங்கன், மதகு நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமசிவம் முரளிதரன், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் பேரின்பராஜா சடாட்சராஜா ஆகியோர் உட்பட மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அதிதிகளினால் திரைச்சீலை நீக்கப்பட்டு நெசவு பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மானுடம் அமைப்பினூடாக, V4U UK நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மதகு நிறுவனத்தினால்
திருப்பெருந்துறை திறந்த வெளிச் சிறைச்சாலையில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியில் மதகு நிறுவனத்தால் கட்ட்டம் அமைத்துக்கொடுக்கப்பட்டதுடன் இதில் 3 கைத்தறிகளும் நூல் சுற்றும் இயந்திரங்களும், ஏனைய உபகரணங்களும் கிராமிய தொழிற்துறை திணைக்களத்தினால் வழங்கப்பட்டன.
அத்துடன் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது பாரிய பயிற்சி நிலையமாக மாற்றம் பெறுவதற்கு பங்களிப்பை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் றிஷானா சாரங்கன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நெசவு நிலைய கட்டடம் அமைப்பதற்கு உடல் உழைப்பை வழங்கி பங்களிப்புச் செய்த திறந்த வெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஊக்குவிக்கும் வகையில் மதகு நிறுவனத்தால் பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேலும் பயிற்சியாளர் ஒருவரின் அனுபவ பகிர்வு இடம்பெற்றதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.