குறிஞ்சி நில தமிழ் மக்களால் முருகனுக்குப் படைக்கப்பட்டு வந்த மூங்கில் அரிசி பொங்கல் கபிலித்தை கந்தன் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக படைக்கப்பட்டது.






















மொனராகலை மாவட்டத்தில் கபிலித்தை கும்புக்கன் ஆற்றின் தென்கரையில், யால சரணாலயத்தின் மத்தியில் அமைந்துள்ள திறந்தவெளி மரக்கோயிலான கபிலித்தை முருகன் ஆலய தரிசனத்திற்காக கடந்த 23ம் திகதி சனிக்கிழமை வரலாற்று ஆய்வாளர் கலாநிதி
என்.கே.எஸ்.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர் புனித யாத்திரை பயணத்தினை மேற்கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக கபிலித்தை புனித பயணத்தின் ஆரம்பத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா  தம்பியும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், இயக்குனரும், பாடகரும், நடிகரும், சிறந்த பக்திமானுமான கங்கை அமரன்  23ஆம் திகதி காலை கொட்டியாகலையில் வீடியோ அழைப்பு முலம் புனித யாத்திரை மேற்கொள்ளவிருந்த அடியார்கள் 53 பேருடனும் பேசியதுடன் அனைவருக்கும் தனது  வாழ்த்துக்களை தெரிவித்து ஆசீர்வாதம் வழங்கினார்.

அதன் பின்னராக வரலாற்று ஆய்வாளர் கலாநிதி
என்.கே.எஸ்.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆரம்பகட்ட பூசையினை மேற்கொண்டு ஆறு உழவு இயந்திரத்தின் மூலம் தங்களது புனித யாத்திரை பயணத்தினை மேற்கொண்டனர்.

இம்முறை கபிலித்தை கந்தப்பெருமானை தரிசிப்பதற்கு சென்ற சமயத்தில் ஆலயத்தினை சென்றடைந்ததன் பிற்பாடு கலந்து கொண்டவர்கள் தங்களது தோசம், பாவம், தீட்டுக்கள் நீங்க ஏழு பாத்திரத்தில் ஏழு பூக்கள் போடப்பட்டு 49 தடவை தலைக்கு நீர்வாத்து பின்னர் கங்கையில் நீராடினார். அதன்பிற்பாடு இரவு கபிலித்தை கந்தனுக்கான காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு (சிங்களவர்கள் இதனை கடவராயன் என்று அழைப்பார்கள்) நெய்வேத்திய பூசைகள் நிகழ்த்தப்பட்டது.

பின்னர் அதிகாலை கங்கையின் கரையோரத்தில் கபிலித்தை முருகனை கலந்து கொண்டவர்கள் கரங்களில் ஏந்தியவாறு தூக்கி வந்து அமர்த்தியவாறு யாக பூசை மற்றும் அபிஷேக பூசைகள் இடம்பெற்றது. இதன்போது பால் அபிஷேகம் கலந்து கொண்ட யாத்திரிகர்கள் தங்கள் கரங்கால் செய்யக் கூடிய ஒரு பாக்கியம் கிடைத்தது.

மூங்கில் மரத்தில் 40 ஆண்டுகளின் பின் உற்பத்தியாகும் அரிய உணவாக விளங்கிய மூங்கில் அரிசியில் பொங்கல் படைத்து பூஜை செய்வது சிறப்பம்சமாக விளங்கியது. மூங்கில் அரிசி பொங்கல் இல்லாமல் முருகனுக்கு விசேட பூஜைகள் இல்லை.

ஆனால் இந்தப் படையல் முறை காலப் போக்கில் அருகி மறைந்து விட்டது. அன்று சங்ககால  குறிஞ்சி நில தமிழ் மக்களால் முருகனுக்குப் படைக்கப்பட்டு வந்த மூங்கில் அரிசி பொங்கல் கபிலித்தை கந்தன் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக   படைக்கப்பட்டது.

 கபிலித்தை கந்தப் பெருமான் நிஷ்டையில் இருந்த புளிய மரத்தை தொட்டு மண்டியிட்டு வணங்குவதற்குரிய வரம் கலந்து கொண்டோருக்கு கிடைத்தது.

 ந.குகதர்சன்