நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்தில் மூன்று வருட கால மொழிக் கொள்கைக்கான மொழித் திட்டமிடல் தொடர்பாகத் தெளிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் உள்ள அரசமொழிகளின் கொள்கை வகிபாகம் மற்றும் பொறுப்புகளும், அதனை நடைமுறைப்படுத்தும் சட்டப் பின்னணி மற்றும் சுற்றறிக்கைகள் பற்றிய புரிதல், நிறுவன ரீதியான மொழித் திட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படை எண்ணக் கரு மற்றும் பிரதான படிமுறைகள், அரச கரும மொழிகளின் அனுகூலங்களை அறிமுகப்படுத்தல், தலைமைத்துவம் மற்றும் ஊக்கப்படுத்தலுடன் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மொழிக் குழு ஒன்றை அமைத்தல், மொழித் திட்டத்திற்கான செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது வளவாளர்களாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மொழிப் பிரிவு நிருவாக உத்தியோகத்தர் ஏ. ஏ. எப் நதிமியா, தொழில்நுட்பக் குழுவின் உத்தியோகத்தர்களான என். உமாகாந்த், ஏ. எல். எம். ரஸ்மின் ஆகியோர் மேற்குறித்த விடயங்களைத் தெளிவு படுத்தினர்.
இந்நிகழ்வில் அரச நிறுவனங்களிடம் சேவை நாடும் போது சேவை பெறுநர் எதிர்பார்க்கும் மொழியில் அதனை வழங்குவதை உறுதிப் படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல அரச நிறுவனங்கள் சார்பாக முதல் கட்டமாக 43 அரசாங்க உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.