மட்டக்களப்பில் 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே நுட்பங்கள் தொடர்பான மூன்று நாட்களுக்கான பயிற்சி நிகழ்வுகளானது கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியரும் பொறியாளருமான எஸ். முருகேந்திரன் தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இன்று (19) இடம் பெற்றது
யப்பான் கராத்தே டு - மரியோ சிக்காய் ( Jappan Karate - Do Maruyoshikai) அமைப்பினரின் கராத்தேயின் நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் இதன் போது மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1999 ஆண்டு யப்பான் கராத்தே மரியோ சிக்காய் ஸ்தாபகர் சிகான் சஷாக்கி டொசி யட்சு அவர்களின் பங்குபற்றுதலுடன் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த அமைப்பு இன்று தனது 25வது ஆண்டு வெள்ளிவிழாவினை கொண்டாடுகின்றது.
இக்கராத்தே அமைப்பு மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்தில் பல காரத்தே ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கியுள்ளதுடன் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலான போட்டிகளில் கலந்து சாதனைகள் பலவற்றை நிலைநாட்டியுள்ளது.
மாணவர்களின் உடல் வலிமையை மேம்படுத்துவதுடன் உள ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாக கொண்டு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
இந் நிகழ்வில் யப்பான் நாட்டினைச் சேர்ந்த சென்சி சுமி டக்குரோ, சென்சி ஓஹா கஸ்யுகி , சென்சி புஜிடா மசாகி, மற்றும் பிரதம போதனாசிரியர் சென்சி தனஞ்செய அபயவர்தன மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.