சனத்தொகையில் 52% பெண்களைக் கொண்ட இலங்கை, பெண் நாடாளுமன்ற
பிரதிநிதித்துவம் தொடர்பான தரப்படுத்தலில் 193 நாடுகளில் 135வது இடத்தில்
உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத் தொகை நிதியம்
தெரிவித்துள்ளது.
நாட்டில் நடந்து வரும் பாலின ஏற்றத்தாழ்வு மற்றும்
பெண்களின் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்
இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்த தங்கள் ஆராய்ச்சியை பல்வேறு நிபுணர்கள் முன்வைத்தனர்.
இந்த
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, பெண்களைப் பாதுகாக்க
வலுவான சட்ட கட்டமைப்புகள் தேவை என்பதை வலியுறுத்தியதுடன், பெண்களைப்
பாதுகாப்பதற்கும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதியாக
உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் தங்களது 20 வயதுகளில் ஊதியம் பெறாமல் புரியும் வீட்டு மற்றும்
குழந்தை பராமரிப்பு பணிகள், சாதாரண நபரொருவர் பெரும் உச்ச வருமானத்தில் 40%
ஊதியத்தை பெறும் தொழிலுக்கு சமமானது என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்
குறிப்பிட்டுள்ளது.
இந்த பணிகள் அவர்களுக்கு ஊதியத்தைக் கொண்டு
வரவில்லை என்றாலும், அது பொருளாதாரத்துக்கு ஒரு பாரிய பங்களிப்பாகும்,
மேலும் சில சமயங்களில் அவர்கள் ஒரு தொழிலில் ஈட்டக்கக்கூடிய பணத்தை விடவும்
மதிப்புமிக்கதாகும்.
இதேவேளை், இலங்கைப் பெண்களில் சுமார் 66% பேர் மிரட்டல் மற்றும் ஆபாச
உள்ளடக்கம் உள்ளிட்ட இணையவழி துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் என
தெரிவிக்கின்றனர், அதே நேரத்தில் 54% பேர் தொழில்முறை சூழல்களில் பாதிப்பை
எதிர்கொள்கின்றனர், இது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள்
சனத்தொகை நிதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில்,
பாலின நீதிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் முழு பொருளாதார மற்றும் சமூக
ஆற்றலையும் திறப்பதற்கும் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பது மிக
முக்கியமானது என்றும் இந்த நிகழ்வில் நிபுணர்கள் வலியுறுத்தினர்.