மனித புதைகுழியின் இரண்டாம் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் ஏழாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளன.

 


யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாம் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் ஏழாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளன. 
 
இதுவரையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, முழுமையாக 33 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
 
அத்துடன், சில சந்தர்ப்பங்களில் பல மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. 
 
இதனால், என்புக்கூடுகளின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடுவதில் சிக்கல் நிலவுவதாக, இந்த வழக்கில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். 
 
அகழ்வின்போது, என்புக்கூடுகளுக்கு மேலதிகமாக புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியொன்றும், நேற்று மீட்கப்பட்டுள்ளன. 

 
இதனிடையே, செம்மணி மற்றும் சித்துபாத்தி புதைகுழி வழக்குகளை ஒன்றாக இணைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, முறையான நீதிமன்ற அனுமதியுடன் அதனை முன்னெடுப்பது குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகச் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.