முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள்தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் 09.07.2025 நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
குறித்த ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் அனைத்துப் காவல் நிலையங்களுக்கும் தமிழ்பேசும் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரையாவது நியமித்தல், வன்னியிலுள்ள பிரதேசசெயலகங்களில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக்குழுக்களைச் செயற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.