மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.


 
 
 










மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் போக்குவரத்து  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  பிமல் நிரோஷன் ரத்நாயக்க பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க  அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (02) இன்று இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர,  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு  செய்யப்பட்டதுடன்,  மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து அபிவிருத்திகள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மட்டு யாழ் புகையிரத சேவையை ஆரம்பித்தல்,  புகையிரத பாதைகளை தரம் உயர்த்துதல், பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை மேம்படுத்தல், தூரபிரதேசங்களுக்கான பேருந்து சேவைகளை ஆரம்பித்தல், பாதிப்படைத்துள்ள வீதிகளை புணர்நிர்மானம் மேற்கொள்ளுதல், அத்தியாவசியமான பாலங்களை நிர்மாணித்தல், புகையிரத சேவையில் ஏற்பட்ட நேரமாற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் தடைப்பட்டுள்ள கிராம நகர போக்குவரத்துக்களை மீள் ஆரம்பித்தல், மற்றும் மாவட்டத்தில் மீண்டும் சிவில் விமான சேவைகளை ஆரம்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன்  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அபிவிருத்த தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த போக்கு வரத்து அமைச்சர்  மாவட்டத்தில் போக்குவரத்திற்கான விசேட உப குழு ஒன்றை அமைத்து மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க வேண்டும் என்றதுடன்  பழுதடைந்து காணப்படும் பேருந்துகளை உடனடியாக திருத்தங்களை மேற்கொண்டு மக்கள் சேவைக்கு துரிதமாக வழங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவருபரஞ்ஜினி  முகுத்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி  திட்டமிடல்  பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரீ நிர்மலராஜ்,  உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள்,  ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.