கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை (16) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த சூழலில் அவரை காப்பாற்ற இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று
மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில்
அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரியாவை
காப்பாற்ற மத்திய அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன. நிமிஷாவின் குடும்பத்தினர் ஏமனில் முகாமிட்டு
உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “ஏமன் சிறையில் நிமிஷா பிரியா உள்ளார். நாங்கள் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று விரும்புகிறோம். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
ஷரியா என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் குருதிப் பணம்
என்பது ஒரு வகையான நீதியாக கருதப்படுகிறது. எனவே, பிரியா
குடும்பத்தினர் சார்பில் உயிரிழந்த மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6
கோடியை வழங்க முன்வந்துள்ளனர்.
அதை மெஹ்தி குடும்பத்தினர் ஏற்பார்களா என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
இதேவேளை, கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
செவிலியரை
மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட
முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால்
செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
நாளை ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது….