மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள், தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் அமைச்சு சார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.
மாகாண சபை முறைமையில் காணப்படும் ஒருசில சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்.
குறுகிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு செயற்பட்டால் அது நிர்வாக கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே மாகாண சபை முறைமை குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.