மனைவியின் காதலனை கொன்ற கணவர் கைது .

 


கேகாலை, தெஹியோவிட்ட, கஹனாவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

திபிரிபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவரே கொலைசெய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். குறித்த பெண் தனது கணவரை விட்டு பிரிந்து கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் தனது பிள்ளையுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, பெண்ணின் கணவர் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது பெண்ணின் கணவர் கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்தவர் கரவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகராறின் போது குறித்த பெண்ணும் அவரது பிள்ளையும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து பெண்ணின் கணவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை (30) காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.