துப்பாக்கிச் சூட்டுக்
காயங்களால் ஏற்பட்ட காட்டு யானைகளின் இறப்புகள் குறித்து சிறப்பு விசாரணை
நடத்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சு இலங்கை காவல்துறையிடம் கோரிக்கை
விடுத்துள்ளது.
இதற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சிகிரியாவின் திகம்பத்தன மற்றும்
கல்கமுவ பகுதிகளில் மீட்கப்பட்ட நான்கு யானைகளின் எச்சங்கள் தொடர்பாக
வனவிலங்கு பணிப்பாளரின் அறிக்கையைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சக
செயலாளர் கே.ஆர். உடுவல, காவல்துறையிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
வேட்டைக்காரர்கள், சட்டவிரோதத்
துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு அருகில்
வசிக்கும் விவசாயிகள் என குற்றம் சாட்டப்படுவோர், யானைகளை வேட்டையாடும்
போக்கு அதிகரித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசியாவில் யானை சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட இனமாகும், மேலும் இலங்கையில் சுற்றுலாவுக்கு யானைகள் முக்கிய ஈர்ப்பாகும்.
இந்த நிலையில், யானைகள் தொடர்ந்தும்
கொல்லப்படுவதும், மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாவதும்
பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல்,
சர்வதேசத்தில் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் என்று
சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவல தெரிவித்துள்ளார்.