நாகம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 


உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது

நிகழ்ச்சியில், பாம்பு பிடி வீரர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக, நாகம் செயலியை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டதுடன் பாம்பு பிடி வீரர்களுக்கான உபகரணங்களை வழங்கினார்.

மேலும், தமிழகத்தில் ‘பரவலாக காணப்படும் பாம்புகள்’ என்ற புத்தகம் மற்றும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.

பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் புகார் அளிக்கவும், உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யவும், நாகம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் புகார் அளித்தால், உடனடியாக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளை பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர்.

இச்செயலியில் பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், தொலைபேசி இலக்கம், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை, ஆண்டுவாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளதுடன் இச்செயலி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.