ஆடி மாதத்தில் வரும்
அமாவாசை, முன்னோர்களின் ஆசிகளையும், பெரும் புண்ணியங்களையும் நம்முடைய
சந்ததிகளுக்குப் பெற்றுத் தரும் உன்னதமான நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
ஆடி அமாவாசையில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி, தானம் ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை.
அதனால் முன்னோர்களின் மனங்களை
மகிழ்வித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கு இது மிகவும் ஏற்ற நாளாகும்.
அந்தவகையில், நாளை (24) ஆடி அமாவாசை தினமாகும்.
இந்த ஆடி அமாவாசை தினத்தில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாளை (24) அதிகாலை 3.06 அளவில் ஆரம்பித்து, மறுநாள் (25) அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது.
எனினும் நாளைய தினம் (24) ராகு காலம்
(காலை 6 முதல் 7.30 வரை), எமகண்டத்தில் (மதியம் 1.30 முதல் 3 வரை) திதி,
தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
சூரிய உதயத்திற்கு முன்பும், பகலில் உச்சி வேளைக்கு பிறகும் திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது நியதி.
இதனால் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 7.35க்குப் பிறகு, பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
நீர் நிலைகளுக்குச் சென்று, அந்தணர்களை
வைத்துத் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக எள்ளும்
தண்ணீரும் இறைத்து வழிபடலாம்.
இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு நேரடியாக வருவதாக ஐதீகம்.
அதேபோல், ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி
அமாவாசை அன்று தானம் கொடுப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள்
முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
இதனால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.
அன்றைய தினம் முன்னோர்களுக்குத் திதி கொடுத்த பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
பகலில் முன்னோர்களுக்கு இலை போட்டுப்
படையல் வைத்து வழிபடுபவர்கள், பகல் 1.25 மணிக்கு முன்பாக படையல் போட்டு,
விரதத்தை நிறைவு செய்து விடலாம்.
மேலும், அன்றைய தினம் யாராவது ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது சிறப்பு.
அதேபோல், வீடு தேடி வருபவர்களை உபசரித்து அனுப்ப வேண்டும்.
முன்னோர்கள் எவரது வடிவத்திலும் வரலாம் என்பதால், உணவு அளித்து அனுப்புவது நல்லது.
எவருக்கும் உணவு அளிக்க முடியாதவர்கள்
காகத்திற்கு உணவு அளிக்கலாம். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வெல்லம் கலந்த
பச்சரிசி ஆகியவற்றை உணவாக அளிக்கலாம்.
முன்னோர்களுக்கு புதிய துணிகள் வைத்துப்
படைக்கும் வழக்கம் உள்ளவர்கள், அதை வழிபட்ட பிறகு, யாராவது
வயதானவர்களுக்குத் தானமாக அளிக்கலாம்.





