லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்.









லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளார்.

பிறந்து 26 நாட்கள் கடந்த நிலையில் என்பு நேயினால் பாதிக்கப்பட்டு உபாதைக்குள்ளான லக்ஷ்மன் லியோன்சன் இதற்கு முன்னர் நான்கு சத்திர சிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு மத்தியிலேயே குறித்த சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.

புனித யோசப்வாஸ் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை தரம் 01 தொடக்கம் தரம் 09 வரை கற்ற இவர் தரம் 10 முதல் தரம் 11 வ கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் கற்றுவந்த நிலையிலேயே குறித்த சாதனையினை நிலைநாட்டி விபுலானந்தா கல்லூரிக்கும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் லக்ஷ்மன் லியோன்சனின் கல்விச் சாதனையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவமளிக்கப்பட்டதுடன், இவருக்கு தேவையான அனுகு வசதியுடனான சக்கர நாற்காலியினை வழங்குமாறு இதன் போது அரசாங்க அதிபர்
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சந்திரகலா கோணேஸ்வரன் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், சத்திர சிகிட்சைக்கு 40 இலட்சம் தேவைப்படுவதாக கூறியதை செவிமடுத்த அரசாங்க அதிபர் அவர்கள் தனக்கு தெரிந்த வெளிநாட்டில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி  உத்தியோகத்தர் வீ.முரளிதரன் ஆகியோர் ஊடாக தம்மாலியன்ற உதவியை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.

தனது வீடு தேடி வந்து தன்னை வாழ்த்தியமைக்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் லக்ஷ்மன் லியோன்சன் தனது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.