செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்திய பிரித்தானிய அரசாங்கம், கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு நாடாளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் (Catherine West),
இந்த பிரச்சினையில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளது,
வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நாடளாவிய ரீதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய உறவை பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.