இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது,
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை
தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு, மேலதிக நடவடிக்கைகளுக்காகச்
சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற
சட்டத்தரணியினால் கடந்த 13 ஆம் திகதி இது தொடர்பான முறைப்பாடு பதில்
காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த முறைப்பாட்டுக்கமைய, இறுதிப் போரின்போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதில், பிரதானமாக, இசைப்பிரியா
எனப்படும் ஷோபா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த
இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில்
இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து
கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.