9 மாதங்களின் பின் பூட்டிய வீட்டிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை -அதிர்ச்சியில் சினிமா உலகம்

 


பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
அவர் இரு வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி அவர் இறந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
அவரது இறுதி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும், ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் இயங்காத நிலையிலிருந்துள்ளன. 
 
அதன் பின்பு எவரும் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. நடிகை ஹுமைரா தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டில் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதால், அந்தப் பகுதியிலிருந்தவர்களுக்கு பெரிதாகத் துர்நாற்றம் எதுவும் வீசியதாகவும் தெரியவில்லை. 
 
அவர், தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என, வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்தார். 
 
அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் ஹுமைரா தங்கியிருந்த வீட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோது அவர் இறந்த விடயம் தெரிய வந்துள்ளது. 
 
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துத்தள்ளதாக அந்த அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.