நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட
சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும்
தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 3,283 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதில் முதன்மை கவனம் செலுத்தி, கடந்த ஜூலை 11 ஆம் திகதி முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பதில் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஒருவார காலம் இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 3,286 சோதனைகளை நடத்தி, 2,464 போதை மாத்திரைகள், 784 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் 5,923 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 1.733 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 19.615 கிலோகிராம் ஹஷிஷ் உள்ளிட்ட பெரிய அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்போது 1,147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2.375 கிலோகிராம் ஐஸ்போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் அதை வைத்திருந்த மற்றும் விநியோகித்ததாக 1,129 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்றையினர் தெரிவித்தனர்.