அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.
1995 O/L, 1998 A/L கல்வியாண்டு பழைய மாணவர்களின் அனுசரணையில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் திருமதி.ரி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 137 மாணவர்களில், 9 மாணவர்கள் 9ஏ, 9 மாணவர்கள் 8ஏ, 6 மாணவர்கள் 7Aஏ, 6 மாணவர்கள் 6ஏ பெறுபேறுகள் உள்ளடங்கலாக 102 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்லூரி ஒன்றுகூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது.
கல்லூரி இன்னிய வாத்தியக்குழுவின் இசை வாத்தியங்கள் முழங்க அதிதிகள், சகிதம் வரவேற்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளின் கரங்களினால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிப்பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. சவுதாகினி சரவணபவன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.ரி.உதயராஜா ஆகியோருடன் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், 95 O/L, 98 A/L கல்வியாண்டு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ந.குகதர்சன்