ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 


 

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ட்ரூத் சோஷியல் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
ஃபோர்டோ மீது முழுமையான குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தங்களது அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா தலையிடுமாயின் நிலைமை ஆபத்தானதாக இருக்கும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்த பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, ஈரானின் தெற்கு நகரமான பந்தர் அப்பாஸ் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய ஈரானில் உள்ள ஈரானிய ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான போர் விமானங்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்பு ஆகியவற்றையும் குறிவைப்பதாகக் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. 
 
அத்துடன் தங்களது மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன