மொரட்டுவையில் பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆற்றிய உரையில், 2025 உள்ளூராட்சி
தேர்தலின் அமைதி காலத்தில் நுட்பமான வழிகளில் பிரச்சாரம் செய்யலாம் என
கூறியது தேர்தல் சட்டத்தை மீறுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக
தேர்தல் ஆணையத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என பிரதமர்
தெரிவித்துள்ளார்.
2025 உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், “நான் தேர்தல் சட்டத்தை மீறும் நோக்கில்
அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அப்போது, எங்கள் பிரச்சார நடவடிக்கைகள்
முடிவடைந்து விட்டதாகவும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாக
கூறினேன். எனது கருத்து ஏதேனும் வகையில் சட்ட மீறலாக கருதப்படுமாயின்,
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மதிப்பேன். அது சாதாரண நபராக இருந்தாலும்,
பிரதமராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்த வேண்டும்,”
என்றார்.
மேலும், சிறிய தவறுகள் கூட இப்போது
கேள்விக்குள்ளாக்கப்படுவது, அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின்
அடையாளம் என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “முன்பு பெரிய பிரச்சனைகள்
மட்டுமே பேசப்பட்டன. இப்போது சிறிய விடயங்களும்
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இது அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக்
காட்டுகிறது. நாம் தரத்தை உயர்த்தியுள்ளோம். இது சமூகத்தில் ஜனநாயகம்
அதிகரித்திருப்பதை நிரூபிக்கிறது,” என அவர் கூறினார்.