ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த – தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதில் வரப்போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது வரப்போகின்ற முதலாவது வருடம்தான்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும் இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.





