தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன் னெடுக்கப்பட்டது

 


மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக    கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம் பெற்றது.

தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்றது.

போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில்  வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில்   காவல்துறையினருக்கும்  மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும்  காவல்துறையினரும் வரவலைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை. போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அமைச்சர்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.