பாளி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை பாராட்டியுள்ளது.

 


 

 

பாளி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை  பாராட்டியுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் 23 ஆம் திகதி சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்திய அரசாங்கத்தால் பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் ஆரம்ப உரையினை கங்காராமை விகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸாஜி தேரர்  வழங்கியதுடன் அதனை அடுத்து குறித்த தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் கீர்த்திமிக்க புலமையாளர்களான தென் பீஹாரின் புத்தகயாவிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஆனந் சிங் (வீடியோ மூலமாக), பாளி மற்றும் பௌத்த கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு  நிலையத்தின் பௌத்த கலாசாரத் திணைக்களத்தின் சங்கைக்குரிய பேராசிரியர் மிரிஸ்வத்தை விமலஞான தேரர், இலங்கையின் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் பாளி திணைக்களத்தின் பேராசிரியர் சங்கைக்குரிய கோனாதெனிய பன்ணரத்தன தேரர், களனி பல்கலைக் கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்களத்தின் சங்கைக்குரிய கலாநிதி தெனியாயே பன்னலோக புத்தரகித்த தேரர் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் பௌத்த கற்கைகள் திணைக்கத்தின் சங்கைக்குரிய கலாநிதி எம் சுகதசிறி தேரர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் புத்தபெருமானின் போதனைகளை பிரசங்கம் செய்வதில் பாளி மொழியின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தினர். அத்துடன் பாளி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை அறிஞர்கள் பாராட்டியதுடன், பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இது அமைவதாகவும் அவர்கள்  இந்த முயற்சியை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்திய அரசாங்கம் பாலி மொழியை ஒரு செம்மொழியாக அங்கீகரிப்பது, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த  துறவிகள் மற்றும் கல்விசார் சமூகங்களின் மொழி ரீதியான ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்றும் இந்நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் நேபாளம் உட்பட்ட நாடுகளின் குருமார்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அத்துடன்  அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடந்த சர்வதேச அபிதம்ம திவாஸில் இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களின் செய்தியை வலியுறுத்தும் வகையில், பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியமையானது புத்த பெருமானின் அமைதி, இரக்கம் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய செய்தியின் தூய்மையைப் பேணவும், தலைமுறைகள் ஊடாக அதன் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவும் என்று இக்கலந்துரையாடல்களின்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.