தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையினை கண்டித்து மட்டக்களப்பு அரச வைத்திய அதிகாரி சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் (03.09.2024) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் தவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடன் நிறுத்து, தேசிய ரீதியான கொள்கையின்றி முறையற்ற ரீதியான மருத்துவக்கல்வியின் விரிவாக்கத்தினை உடன் நிறுத்து, சுய விசாரணை ஒன்றை மேற்கொள்ளமுடியாத விசாரணைக்குழு எதற்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் அடக்குமுறைகளை பிரயோகிப்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற விடயங்களை வெளிக்கொணர முடியாமல் போகும் என போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாகவே இதற்கு எதிராக நாடு தழுவிய வகையில் இந்த
போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக இங்கு கூறப்பட்டுள்ளது.