2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 712,321 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும், தபால் மூல வாக்குகள் ஒகஸ்ட் 26 ஆம் திகதியும் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும், மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளது.