ஜனாதிபதி பொதுவேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்படுவாரா ?

 


 

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனுக்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

இந்தப் பொதுக்கட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரைக் கண்டறிவதற்கு உப குழுவை நியமித்திருந்தது. அந்தக் குழு பல்வேறு தரப்புகளுடனும் பேச்சு நடத்தியிருந்தது.

இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது