அண்மையில் மலையகத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் செயற்கை கள் போத்தல்கள் வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டை சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் கள்ளானது தரத்தில் குறைந்ததாகக் காணப்பட்டதால், இவ்விடயம் தொடர்பில் அவசரமாக ஆராயுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் கடந்த வாரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த PHI தொழிற்சங்கம், விநியோகிக்கப்படும் கள்ளில் செயற்கையாகவும், மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தான இரசாயனங்கள் கலந்திருப்பதாகவும் நம்பத்தகுந்த ஆதாரம் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
PHI தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அவர்கள் ஏற்கனவே இந்த விடயத்தை ஆராய்ந்து வருவதாகவும், பிரச்சார பேரணிகளில் கொடுக்கப்படும் பொருட்களின் சுகாதார அபாயங்கள் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அறிக்கை கோருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பேரணிகளின் போது மென் மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக பல தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட நிர்வாகங்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.