இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

 


இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க  வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என மட்டக்களப்பு சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்,

மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நேற்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைக் குறிப்பிட்டார்.

இதனை நிர்மாணிக்க பல இடங்களை தேடினோம். இறுதியில் குறைந்த வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் வாழும் ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.

பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 1,200 மாணவர்கள் தற்போதும் இங்கு கல்வி பயில்கின்றனர். இது ஒரு இனத்திற்காகவோ மதத்துக்காகவோ தனியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்ல. அனைத்து இன, மத மாணவர்களுக்கும் இங்கு இடமுண்டு என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்,

நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அன்று எமது நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதால் நாம் இலங்கையர் என்று உலகத்திற்கு பெருமிதமாக சொல்லிக்கொள்ள முடிகிறது.” என்று தெரிவித்தார்.